Loading...
அமெரிக்காவில் இனி கடிகார முள்ளை மாற்ற வேண்டாம்? கோடை கால நேரத்தை நிரந்தரமாக்க மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவில் கோடை கால நேரத்தை நிரந்தரமாக்க மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் இனி கடிகார முள்ளை மாற்ற வேண்டாம்? கோடை கால நேரத்தை நிரந்தரமாக்க மசோதா நிறைவேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
09:59 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றி அமைக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு ஆதரவாக 308 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் பதிவாகி மசோதா நிறைவேறியது. குடியரசுக் கட்சியின் பிரதிநிதி வெர்ன் புக்கனன் என்பவரால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா சட்டம் ஆனால், மார்ச் முதல் நவம்பர் வரை கடைப்பிடிக்கப்படும் கோடை கால நேரமே ஆண்டு முழுவதும் நிரந்தரமாக்கப்படும். இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவை ட்ரூத் சோஷியல் தளம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

முட்டுக்கட்டை

செனட் சபையில் எழுந்துள்ள முட்டுக்கட்டை

பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கட்டமாக இது செனட் சபையின் ஒப்புதலை பெற வேண்டும்.

ஆனால், செனட் சபையில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் டாம் காட்டன் உள்ளிட்ட சிலர் இந்த மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குளிர்கால காலங்களில் காலை 9 மணி வரை சூரிய உதயம் ஏற்படாத பட்சத்தில், பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் இருளில் பயணிக்க நேரிடும் என்ற பாதுகாப்புப் புகார்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆதரவு

பொதுமக்களின் ஆதரவும், வரலாற்றுப் பின்னணியும்

ஆண்டுக்கு இருமுறை நேரத்தை மாற்றுவது அமெரிக்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ ரீதியாகவும், அடிக்கடி நேரத்தை மாற்றுவது மனச்சோர்வு மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

1966 ஆம் ஆண்டின் 'சீரான நேரச் சட்டத்தின்' படி இந்த வழக்கம் தொடரும் நிலையில், அரிசோனா மற்றும் ஹவாய் போன்ற சில மாநிலங்கள் ஏற்கனவே இதில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.

செனட் சபையின் பெரும்பான்மை தலைவர் ஜான் தூன் இந்த மசோதாவை வாக்கெடுப்பிற்கு கொண்டு வருவாரா என்பதைப் பொறுத்தே இதன் இறுதி வடிவம் முடிவாகும்.

ADVERTISEMENT