ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா
அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தற்போது வாக்னர் குழு, லெபனானின் ஹெஸ்புல்லா போராளிகளுக்கு, SA-22 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையை கண்காணித்து வருவதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் SA-22 அமைப்பு, டிரெக்கின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும், வான் ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கி ஆயுத அமைப்பு ஆகும்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காத ரஷ்யா
SA-22 இன்னும் ஹெஸ்புல்லாவுக்கு வழங்கப்படவில்லை என்றும், அதே சமயம் வாக்னர் படைவீரர்கள் மற்றும் ஹெஸ்புல்லா வீரர்கள், சிரியாவில் முகாமிட்டு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு குறித்து, ரஷ்யா தற்போது வரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஹெஸ்புல்லா- இஸ்ரேல் இடையேயான மோதலும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அமெரிக்கா ஹெஸ்புல்லா அமைப்பு ஹமாசுடன் இணைவதை தடுக்க, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது.