
'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்கும், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இஸ்ரேலிய பிரதிநிதி எலி கோஹனிடம் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய பிரதிநிதி எலி கோஹனிடம் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் பேசினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த எலி கோஹன், "இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போருக்கும் இந்தியா ஆதரவு தெரிவிப்பதற்கு நன்றி" என்று கூறியிருந்தார்.
"எங்கள் போர் ஒரு வெறுக்கத்தக்க பயங்கரவாத அமைப்புக்கு எதிரான முழு ஜனநாயக உலகின் போர்" என்றும் கோஹன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ட்ஜ்க்க்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவில் நிலைப்பாடு
இந்நிலையில், இஸ்ரேலிய பிரதிநிதி எலி கோஹனுடனான உரையாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "தற்போதைய நிலைமை குறித்த எங்களது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டதை அவர் பாராட்டினார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்கும், இரு நாடுகளும் தீர்வு காண்பதற்கும் எங்களின் உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம்." என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய பலமுனைத் தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று விவரித்த இந்தியா, பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் எதிர் தாக்குதலின் போது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.