இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இஸ்ரேலை அடைந்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன். முன்னதாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை தாக்கப்பட்டு 500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை குற்றம் சாட்டிய நிலையில், இஸ்ரேலோ, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மற்றொரு அமைப்பை சுட்டிக் காட்டியிருக்கிறது. தற்போது இஸ்ரேல் வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்கூறிய வகையில் காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு பாலஸ்தீனத்தின் மற்றொரு அமைப்பை சுட்டிக்காட்டிய இஸ்ரேலின் கருத்துக்கு, ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை:
பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் அதிபர் மற்றும் ஜனாதிபதியிடம் பேசிவிட்டு, நேதன்யாகூவுடன் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பைடன். மேலும், தான் இஸ்ரேலில் இருப்பது ஒரேயொரு காரணத்திற்காகத்தான், அது அமெரிக்கா எந்த பக்கம் இருக்கிறது என்பதை இஸ்ரேல் மக்களுக்கு, உலக மக்களுக்கு உணர்த்தவே, எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளுக்கும், தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கும் அதிபர் ஜோ பைடன், ஹாமஸ் என்பது பாலஸ்தீனத்தைக் குறிக்கவில்லை எனவும், பாலஸ்தீனத்துக்கு ஹமாஸ் துன்பத்தையே கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.