
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மித மழை பெய்யும் வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை காணப்படும். இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவானது. அதன் பின்னர் சோலையார் பகுதியில் 5 செ.மீ., உபாசி மற்றும் வால்பாறையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
மித மழை
தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு
தற்பொழுது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலைமையால், செப்டம்பர் 3ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் சுற்றுவட்டார மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடலோரங்கள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.