LOADING...
75 வயதில் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறினேனா? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்
75 வயதில் ஓய்வு பெறுவது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கம்

75 வயதில் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறினேனா? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2025
08:25 pm

செய்தி முன்னோட்டம்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயது ஓய்வு வயது குறித்து சமீபத்திய அரசியல் ஊகங்களைத் தள்ளிவைத்து, தான் ஒருபோதும் அத்தகைய கருத்தை முன்மொழியவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட வயதில் பதவி விலக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனக்கோ அல்லது வேறு யாருக்கோ ஓய்வு பெற வேண்டும் என்று தான் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். தேவைப்பட்டால், தனது 80 வயதிலும் சங்கத்திற்குச் சேவை செய்யத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். கடந்த ஜூலை மாதம் நாக்பூரில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் புயலைக் கிளப்பியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

பேச்சு

நாக்பூர் பேச்சால் சர்ச்சை

மோகன் பகவத் அந்த நிகழ்வில் ஒருவருக்கு 75 வயதில் சால்வை போர்த்துவது, அவர் முதிர்ச்சியடைந்து விட்டார் என்றும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என கூறியிருந்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சிவசேனாவின் சஞ்சய் ரௌத், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்புபடுத்திப் பேசினர். செப்டம்பர் மாதம் 75 வயதை அடையும் மோடிக்கு இது ஒரு நினைவூட்டல் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். மேலும், 75 வயதைக் கடந்த மூத்த பாஜக தலைவர்களை பிரதமர் புறக்கணித்ததாக சஞ்சய் ரௌத் கூறியிருந்தார்.