LOADING...
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2025
03:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் இப்படி அஜாக்கிரதையாகக் கையாளப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வீசப்பட்ட மனுக்கள், திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெறப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.

தொடர்பு

அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

இந்த மனுக்களில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் கையொப்பங்களும் இருந்ததால், இந்தச் சம்பவத்தில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பட்டா மாறுதல், பெயர் மாற்றம் மற்றும் ஸ்மார்ட் கார்டு கோரிக்கைகள் தொடர்பான பல மனுக்கள் ஆற்றில் கிடந்துள்ளன. இந்தத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், ஆற்றுப்பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த மனுக்களைக் கைப்பற்றிச் சென்றனர். மனுக்களை ஆற்றில் வீசியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதற்குத்தானா மக்கள் வரிசையில் நின்று மனுக்களை அளிக்கின்றனர் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post