
கோவை நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளப்பெருக்கு அபாயத்தால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, வால்பாறை, சின்னக்கல்லார், சோலையார் மற்றும் சின்கோனா பகுதிகளில் சனிக்கிழமை (மே 24) இரவிலிருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
சின்னக்கல்லாரில் 137 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலான மழை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதிக மழைப்பொழிவையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ள அபாயம் காரணமாக சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு மற்றும் கவி அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாலை 4 மணிக்குள் தங்கள் இருப்பிடங்கள் மற்றும் வீடுகளுக்குத் திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், கோவை மற்றும் நீலகிரி மட்டுமல்லாது கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்தமிழக பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.