மூன்றாம் நாளாக வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள், என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச்சந்தை மூன்றாம் நாளாக இன்றும் (மார்ச் 13) வீழ்ச்சியுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், நிஃப்டி 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 23,300 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியது. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை அதீத சரிவைச் சந்தித்து வருவது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் தீவிரமான போர்ச் சூழல் உலகளாவிய சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களை நோக்கித் திரும்புகின்றனர்.
பங்குச்சந்தை
வீழ்ச்சிக்குக் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் இதோ:
போர் பதற்றத்தால் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். இது சந்தையின் போக்கை முடக்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிச் செல்வது பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, உலகளாவிய அரசியல் சூழல் சீராகும் வரை சந்தையில் இந்தத் தடுமாற்றம் நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பொறுமையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.