சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை
சிவகங்கை மாவட்ட கீழடி அருங்காட்சியகத்தில் சங்கக்கால மக்கள் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கும் வகையில் ஆறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வைகையும் கீழடியும் என்னும் கட்டிடத்தினை பார்வையிட்ட நிலையில் அதில் உள்ள மினி திரையரங்கையும் நம்மால் காணமுடியுமாம். அடுத்ததாக 'நிலமும் நீரும்' என்னும் கட்டிடம் உள்ளது. அதன் நுழைவு வாயிலிலேயே தமிழகத்தின் வீர விளையாட்டாக கூறப்படும் ஜல்லிக்கட்டு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்து சென்றால் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட திமில் உள்ள காளையின் எலும்புக்கூடு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நீரை குறிக்கக்கூடிய சங்க கால மக்கள் பயன்படுத்திய செங்கல் கால்வாய் மாதிரியும் செங்கல் கற்களையும் டிஸ்பிளேவில் வைத்துள்ளார்கள்.
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள்
அதனை தொடர்ந்து சுருள் வடிவ சுடுமண் நீர் குழாய்களும், பத்து அடுக்குகள் கொண்ட பிரமாண்டமான உரை கிணறும், டீப்பாயும் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 'களம் செய்கோ' என்னும் ஓர் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சங்ககால மக்கள் மண்பாண்ட தொழிலை செய்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகிறது. இங்கு பலவித மண்பாண்டங்கள், கருப்பு சிவப்பு நிற மண்பாண்டங்கள், வெள்ளை பூச்சி பெற்ற பானை ஓடுகள், கெண்டி மூக்கு பானைகள், செவ்வண்ண பூச்சுப்பெற்ற பானைகள் முதலியன உள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் போலவே மாதிரிகள் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சங்ககால மக்களின் மண்பாண்ட தொழில் முறை கொண்ட அனிமேஷன் வீடியோ பதிவு ஒன்றும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.