LOADING...
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2025
08:13 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையின் மணல்மேடு பகுதியில் தலா 10 செ.மீ., பெரம்பலுார் (தழுதலை), திருவள்ளூர் (ஊத்துக்கோட்டை) பகுதிகளில் தலா 9 செ.மீ., திருச்சி (புள்ளம்பாடி), தஞ்சாவூர் (பாபநாசம்), திருவாரூர் (திருத்துறைப்பூண்டி), மயிலாடுதுறை (கொள்ளிடம்) ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை

நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம்

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மத்திய மேற்கு வங்கக் கடலிலும் அருகிலுள்ள பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.