Page Loader
அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD
அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD

எழுதியவர் Venkatalakshmi V
May 24, 2025
09:02 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளிலும் பருவமழை பரவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி தெற்கு கொங்கண் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், எனினும் அது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி அருகில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை

தமிழகத்தில் மழை நிலைமை என்ன?

இந்த சூழலில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உதகை மற்றும் வால்பாறை பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.