IPL 2026 அட்டவணை அப்டேட்: மார்ச் 28-இல் தொடங்க வாய்ப்பு; ஆர்சிபி-யின் ஹோம் கிரவுண்ட் விவரம்
செய்தி முன்னோட்டம்
19-வது ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், தேர்தலை கருத்தில் கொண்டு அட்டவணையை இரண்டு பகுதிகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியான செய்திகளின்படி, ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 அல்லது 29 ஆகிய தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளது. முன்னதாக மார்ச் 26 எனத் திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது சில நாட்கள் தள்ளிப்போகிறது. மே 31-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதிக்கான அட்டவணை மார்ச் 6 அல்லது 7-ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல் தேதிகளுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
ஹோம் கிரவுண்ட்
RCB-யின் ஹோம் கிரவுண்ட் சர்ச்சை
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த முறை நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக, அங்கு போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆர்சிபி தனது 7 உள்ளூர் போட்டிகளில், 5 போட்டிகளை மட்டுமே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும். மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெறும் என ஆர்சிபி CEO ராஜேஷ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார். கர்நாடக அரசு மற்றும் காவல்துறையின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பெங்களூரு ரசிகர்கள் தங்களது அணியை மீண்டும் சொந்த மண்ணில் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.