உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! 18 வயது அனஹத் சிங் சாதனை
செய்தி முன்னோட்டம்
கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான 18 வயதான அனஹத் சிங் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலமாக உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற மாபெரும் பெருமையை அவர் அதிகாரப்பூர்வமாக பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆதிக்கம்
எகிப்தின் 13 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி
இந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அனஹத் சிங், இரண்டாம் இடத்தில் இருந்த எகிப்து நாட்டின் திறமைவாய்ந்த வீராங்கனையான ருகய்யா சேலமை எதிர்த்துப் போட்டியிட்டார்.
போட்டியில் களம் இறங்கியது முதல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அனஹத், 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட் கணக்கில் எகிப்து வீராங்கனையை மிக எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம் 2011-ஆம் ஆண்டு முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த எகிப்திய வீராங்கனைகளின் 13 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு அனஹத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சாதனை முறியடிப்பு
ஜோஷ்னா சின்னப்பாவின் சாதனையை முறியடித்த அனஹத்
முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய நாட்டின் முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா வெள்ளிப் பதக்கம் அதாவது இரண்டாம் இடம் பிடித்ததே இதுவரை இந்திய விளையாட்டின் சிறந்த சாதனையாகக் கருதப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றிருந்த அனஹத் சிங், இந்த ஆண்டு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியதன் மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஷ்னா சின்னப்பாவின் சாதனையை முறியடித்து இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒலிம்பிக் நம்பிக்கை
2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிற்கு புதிய நம்பிக்கை
இந்தத் தொடர் முழுவதிலும் தனது அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய அனஹத் சிங், வெறும் இரண்டு செட்களை மட்டுமே எதிராளியிடம் இழந்து தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார்.
தற்போது மூத்தோர் பிஎஸ்ஏ உலகத் தரவரிசையில் 20வது இடத்தில் இருக்கும் அனஹத் சிங், ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்படவுள்ள வரவிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் வென்று தரும் மிக முக்கியமான நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.