சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல்! அமெரிக்கா தாக்குதலை நிறுத்தக் காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஜீசான் மற்றும் யான்பு நகரில் உள்ள தளங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஜீசான் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து அடர்ந்த புகை மண்டலம் எழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், யான்பு நகரை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதியில் உள்ள கிரீஸ் நாட்டின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
தற்காலிக நிறுத்தம்
அமெரிக்கா தனது தொடர் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியது
மறுபுறம், கடந்த 13 நாட்களாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்தி வந்த தீவிர வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேலும் விரிவடைவதைத் தடுக்கவும், தங்களது ஆயுத இருப்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஆற்றல் விநியோகம் மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டுமே டிரம்ப் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து முழு வீச்சில் அமலில் இருக்கும் என அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்
காஸ்பியன் கடலில் ஈரானியக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
மத்திய கிழக்கு பதற்றத்திற்கு இடையே, காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானின் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈரானிய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது செயற்கைக்கோள் தரவுகளை ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்த வழங்கி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப் போர்
ஏமனில் மீண்டும் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், மாற்றுப் பாதையாக விளங்கும் சவுதியின் செங்கடல் துறைமுகங்கள் மீது ஹவுத்திகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகள் மாறீப் மற்றும் அல்-ஜவ்ஃப் பகுதிகளில் உள்ள ஹூதிகளின் ஏவுகணை மையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளன.
2022 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஏமனில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.