
தமிழக டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பதவி வகித்த சங்கர் ஜிவால், இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது, அவர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான புதிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் பிற பெரும் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக, காவல்துறை ஆணையத்தைப் போலவே, இந்த புதிய ஆணையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேம்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பின்னணி
சங்கர் ஜிவால் பின்னணி
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதல் பணியாக 1993 ஆம் ஆண்டு மன்னார்குடியில் உதவி எஸ்பியாகப் பொறுப்பேற்ற அவர், 1995 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்த அவர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழகத்தின் டிஜிபியாகப் பொறுப்பேற்றார். டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டும், புதிய பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டும், சங்கர் ஜிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.