
NEET தேர்ச்சி பெற்ற மூன்று சீனியர் சிட்டிசன்ஸ், MBBS படிப்புக்கு விண்ணப்பம்!
செய்தி முன்னோட்டம்
"கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மூத்த குடிமக்கள், வயது 60-ஐ தாண்டியிருந்தாலும், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இந்த மூவரில், இருவர் வழக்கறிஞர்கள் என்றும், மூவரும் மருத்துவம் கற்கும் கனவுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர் என மாநில தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையம் (NMC), நீட் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை என்றும், எத்தனை முறையும் தேர்வு எழுத அனுமதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கையின் பலனை, பட்டதாரிகளும், வல்லுநர்களும் பயன்படுத்தி தங்கள் மருத்துவ கனவுகளை நனவாக்கி கொள்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
சிறப்பு ஒதுக்கீடு
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு
விண்ணப்பித்த மூத்த குடிமக்கள், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், குறிப்பாக 69% இட ஒதுக்கீடு மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடின் கீழ், வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக கூறப்படுகிறது. கூடுதலாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு கட்டணமும், தங்கும் செலவுகளும் ஏற்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்: "2017 பிறகு இது மிக உயர்ந்த எண்ணிக்கை. இளைய மாணவர்களுடன் போட்டியிடுவதற்கான மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும், இவர்களில் சிலர் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவத்தில் சேர்ந்திட வாய்ப்பு உள்ளவர்கள்" என்றனர். இந்த ஆண்டில் மட்டும், 35 வயதுக்கு மேற்பட்ட செவிலியர், சித்தா-ஹோமியோபதி மருத்துவர், ஆய்வக நிபுணர்கள், வழக்கறிஞர்கள் என 25-க்கும் மேற்பட்ட பேர், MBBS மற்றும் BDS போன்ற பாடநெறிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.