ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது. இஸ்ரேலின் தரை வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், பலரை சுட்டுக் கொன்று, 240க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஹமாசின் தாக்குதலுக்கு அன்றே பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. முதலில் விமானம் வழியாக காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல், பின்னர் ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக ஒழிக்க காசாவிற்குள் படைகளை அனுப்பியது. இஸ்ரேலின் தாக்குதலில் தற்போது வரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதாக பிரதமர் மோடி ட்விட்
அக்டோபர் 7- ஹமாசின் ஏவுகணை தாக்குதலுக்கு பின், போர் நிலையை இஸ்ரேல் அறிவித்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்பதாக பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அக்டோபர் 8-ஹமாசின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை, 9/11 தாக்குதலுடன் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் ஒப்பிட்டார். அக்டோபர் 9- இஸ்ரவேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, USS ஜெரால்ட் R ஃபோர்டு மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியது. காசாவிற்கு அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் துண்டித்தது. அக்டோபர் 10- அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தனர். அக்டோபர் 11- பணயக்கைதிகளைக் கொல்லப்போவதாக இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுத்தது.
இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷனை தொடங்கிய இந்தியா
அக்டோபர் 12- பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான். ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதிவெடுத்தது. அக்டோபர் 13- இஸ்ரேலில் சிக்கி இருந்த 212 இந்தியர்கள், 'ஆபரேஷன் அஜய்' மூலம் டெல்லி வந்தடைந்தனர். காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்க, 24 மணிநேர கெடு நிர்ணயித்து 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு. அக்டோபர் 14- காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அதிபர் பைடன் பேச்சு. அக்டோபர் 15- இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் பல உயிர்களை காவு வாங்கும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை. நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம் என உலக சுகாதார அமைப்பு கண்டனம்.
அமெரிக்க, பிரிட்டன் தலைவர்கள் இஸ்ரேல் பயணம்
அக்டோபர் 16- காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள். தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வந்தது. அக்டோபர் 17- பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 18- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் தொடங்கிய பின், இஸ்ரேலுக்கு பயணம். அல்-அக்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அரபு நாட்டு தலைவர்கள் உடனான அமெரிக்க அதிபரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 19- பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது.
இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர்க்கப்பல்
அக்டோபர் 20- ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்தது அமெரிக்க போர் கப்பல். எகிப்திலிருந்து காசாவிற்கு நிவாரண உதவிகள் செல்லும் ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார். அக்டோபர் 21- போர் தொடங்கியதற்கு பின் முதல் முறையாக நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. அக்டோபர் 22- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் இஸ்ரேல் சென்றனர். மேற்கு கரையில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 23- காசா மீது தாக்குதலை தீவிரபடுத்தியது இஸ்ரேல். ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசா இது இரண்டாவது கட்டக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
அக்டோபர் 24- இஸ்ரேலை சேர்ந்த இரு பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேல் சென்றார். அக்டோபர் 25- ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 26- எரிபொருள் பற்றாக்குறை எதிரொலியால், காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படும் அபாயம். அக்டோபர் 27- சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல். போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பணயக் கைதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஹமாஸ் அறிவித்தது. அக்டோபர் 28- காசா மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல். அக்டோபர் 29- காசா மீது இரண்டாவது கட்ட தாக்குதலை தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது.
காசா நகரை சுற்றிவளைத்த இஸ்ரேல் படைகள்
அக்டோபர் 30- இஸ்ரேலுக்கு எதிராக, ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்ட போராட்டக்காரர்கள். அக்டோபர் 31- போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் உறுதி. நவம்பர் 1- ஜபாலியா பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல். இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே முதல் முறையாக வெளியேறினர். நவம்பர் 2- அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது என ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு கருத்து. நவம்பர் 3- காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் பதில் எச்சரிக்கை விடுத்தது.
10 ஆயிரத்தை தாண்டிய பாலஸ்தீனிய உயிரிழப்புகள்
நவம்பர் 4- காசா மருத்துவமனை அருகே, ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 5- போர் தொடங்கியதற்கு பின் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவு துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் பயணித்தார். பயணத்தின் போது பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். நவம்பர் 6- தாக்குதலை தீவிரப்படுத்தி, காசா பகுதியை இரண்டாக பிரித்ததாக இஸ்ரேல் அறிவித்தது. நவம்பர் 7- காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.