QUAD மாநாடு: ஜி ஜின்பிங்கிற்கு 105 நிமிடங்கள், ஆனால் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்களுக்கு வெறும் 55 நிமிடங்கள்தானா?
செய்தி முன்னோட்டம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு பதிலடியாக கருதப்பட்ட Quad கூட்டமைப்பின் தலைவர்கள் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா), இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சந்திக்கவுள்ளனர். ஆனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒதுக்கியுள்ள நேரம் வெறும் 55 நிமிடங்கள் மட்டுமே என்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் நடத்தவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், குவாட் கூட்டமைப்பு வாஷிங்டனுக்கு இன்னும் முக்கியமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப்
ஜி ஜின்பிங்கிற்கு 105 நிமிடங்கள்; குவாட் கூட்டமைப்புக்கு 55 நிமிடங்களா?
டிரம்ப் ஒதுக்கியுள்ள நேர அளவுகளே இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
புடினுடனான முத்தரப்பு சந்திப்பிற்கு முன்பாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் டிரம்ப் 105 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஆனால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய 4 நாட்டுத் தலைவர்களின் குவாட் கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக (55 நிமிடங்கள்) மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு மற்றும் தூதரகச் சம்பிரதாயங்களுக்கே இதில் பெரும்பகுதி நேரம் சென்றுவிடும் எனக் கருதப்படுகிறது.
"டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதால், குவாட் தனது மூலோபாய முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு உத்தியிலும் குவாட் குறித்து பெயரளவிற்கே குறிப்பிடப்பட்டுள்ளது" என மூலோபாய விவகார நிபுணர் விமர்சித்துள்ளார்.
நிலைப்பாடு
இந்தியாவின் நிலைப்பாடும் மாற்றுப் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும்
2024 செப்டம்பரில் ஜோ பைடன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு, 2025-ல் இந்தியாவில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு வர்த்தகம், வரி விதிப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் நடைபெறவில்லை.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, குவாட் விவகாரங்களை வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் ஒப்படைத்துவிட்டார்.
இத்தகைய சூழலில், இந்தியாவும் மற்ற உறுப்பு நாடுகளும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய வழிகளை கையாண்டு வருகின்றன.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இல்லாமல், இந்தியா தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்க இந்தியாவுக்கு குவாட் தளம் அவசியமாக உள்ளது.
சந்திப்பு
பிரதமர் மோடி -டிரம்ப் சந்திப்பில் என்ன எதிர்பார்க்கலாம்?
மணிலா பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு பிறகு 5 மாதங்கள் கழித்து இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.
இருதரப்பு பேச்சுவார்த்தையில் வர்த்தகம், இறக்குமதி வரிகள், சந்தை அணுகல் மற்றும் இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை முக்கிய இடம்பிடிக்கும்.
கடல்சார் பாதுகாப்பு, அரிய கனிம விநியோகச் சங்கிலி, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து குவாட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.