நீங்கள் காப்பி செய்யும் கிரிப்டோ முகவரியை நொடியில் மாற்றும் மர்ம வைரஸ்: 178 பிரபல இணையதளங்களில் புகுந்த ஹேக்கர்கள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச இணைய பாதுகாப்பு உலகில் மீண்டும் ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி 178 நிறுவனங்களின் இணையதளங்களில் மர்ம ஹேக்கர் ஒருவர் ஊடுருவி, பயனர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வாலட் தகவல்களை திருடும் வகையிலான மால்வேர் குறியீடுகளை புகுத்தியுள்ளதாக 'ரிப்போர்ட் யுஆர்ஐ' என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த தாக்குதலால் ஐகியா, ஜூம், சேல்ஸ்ஃபோர்ஸ், எச்எஸ்பிசி மற்றும் கிராக்ஸ் இந்தியா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணையதளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹேக்கர்கள்
ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியது எப்படி?
இணையதளங்களில் A/B testing மற்றும் சோதனைகளை நடத்தப் பயன்படும் 'Optimizely Web' என்ற தளத்தின் வழியாகவே ஹேக்கர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
வாடிக்கையாளர் திட்டங்களின் 'Project JavaScript' பகுதியில் ஹேக்கர் ஒரு தீங்கிழைக்கும் குறியீட்டை செருகியுள்ளார்.
ஆப்டிமைஸ்லியின் அதிகாரப்பூர்வ சான்றிதழுடன் இது இணையதளங்களில் இயங்கியதால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
பாதிக்கப்பட்ட இணையதளப் பக்கங்கள் திறந்திருக்கும்போது, பயனர்கள் தங்களது கிளிப்போர்டில் காப்பி செய்யும் கிரிப்டோகரன்சி வாலட் முகவரிகளை இந்த மால்வேர் உடனடியாக கண்டறிந்து, அதற்கு பதிலாக ஹேக்கரின் வாலட் முகவரியை மாற்றிவிடும்.
இதன் மூலம் நவம்பர் 16 இரவு வரை ஹேக்கரின் வாலட்டிற்கு சுமார் 7,040 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.60 லட்சம்) சென்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பட்டியல்
பாதிக்கப்பட்ட 178 முக்கிய நிறுவனங்களின் பட்டியல்
இணையதளப் படிவங்களில் பயனர்கள் நேரடியாக உள்ளிடும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் திறனும், Coruna மற்றும் DarkSword ஆகிய கருவிகள் மூலம் ஐபோன் மற்றும் ஐபேட்களை தாக்கும் திறனும் இந்த மால்வேருக்கு இருந்துள்ளது.
மொத்தம் 1,611 ஆப்டிமைஸ்லி குறியீடுகளை ஆய்வு செய்ததில், 178 நிறுவனங்களுக்குச் சொந்தமான 188 குறியீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எச்எஸ்பிசி அமெரிக்கா, எச்எஸ்பிசி ஹாங்காங், ஈக்விஃபாக்ஸ் மற்றும் காயின்பாஸ் போன்ற கிரிப்டோ தளங்கள்; ஜூம், சேல்ஸ்ஃபோர்ஸ், பிட்லி, ஐகியா, அசோஸ், மேட்டல், அமெரிக்கன் ஈகிள், கிராக்ஸ் இந்தியா மற்றும் லெவிஸ்; ஏர் பிரான்ஸ்-கேஎல்எம், அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனங்கள்; மேலும் Change.org மற்றும் யுனிசெஃப் அமெரிக்கா இணையதளங்களும் இதில் அடங்கும்.
ஆப்டிமைஸ்லி
பாதுகாப்பு குறைபாட்டைச் சரிசெய்த ஆப்டிமைஸ்லி
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கணக்குப் பதிவு நடைமுறையில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத நபர் தீங்கிழைக்கும் ஜாவாஸ்கிரிப்டை சேர்த்ததை ஆப்டிமைஸ்லி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
"பாதிக்கப்பட்ட பாதைக்கான அணுகலை முடக்கி, பாதுகாப்புத் தீர்வை (Fix) நடைமுறைப்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து தீங்கிழைக்கும் குறியீடுகள் நீக்கப்பட்டு, பயனர் கணக்குகளின் அணுகல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் PHP மொழிக் குறைபாடு மற்றும் இ-முத்ரா பாதுகாப்புச் சிக்கல்களைத் தொடர்ந்து, தற்போது நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.