Loading...
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகர வாய்ப்புள்ளது

நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'அக்வான்' புயலாக மாறியுள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் புயலின் நகர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை முன்னறிவிப்பு

மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு

இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 18 & 19: சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் நவம்பர் 22-ஆம் தேதி வரை வட கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் பாதை

புயலின் பாதையைக் கணிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

புயலின் நகர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

"புயலின் நகர்வுப் பாதை குறித்துப் பல்வேறு வானிலை மாதிரிகளை ஆய்வு செய்வது வழக்கம். இந்த முறை வெவ்வேறு முடிவுகள் கிடைத்ததால், புயலின் திசையைத் துல்லியமாகக் கணிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது."

மத்திய மேற்கு வங்கக்கடலில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் இந்தப் புயல் ஆந்திரா நோக்கிச் செல்லும்போது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

ADVERTISEMENT