ஐசிசி தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெய் ஷா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் 36 வயதில் ஐசிசியின் மிக இளம் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உலக கிரிக்கெட்டை வழிநடத்த உள்ளார்.
உறுப்பு நாடுகளின் ஆதரவு
இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் உறுப்பு நாடுகளின் முழு ஆதரவுடன் தொடரும் தலைமை
ஜெய் ஷாவின் மறுநியமனத்திற்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் அசோசியேட் கிரிக்கெட் வாரியங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை வலுப்படுத்தவும், இருதரப்புத் தொடர்களின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும் ஜெய் ஷாவின் அனுபவம் மிக அவசியம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் பாராட்டியுள்ளார்.
மேலும் விளையாட்டின் நேர்மையை பாதுகாப்பது மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதே ஐசிசியின் முதன்மை இலக்காக அமைந்துள்ளது.
ஒலிம்பிக்
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஜெய் ஷா வெளியிட்டுள்ள இலக்குகள்
மறுநியமனத்திற்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ள ஜெய் ஷா, ஐசிசி வாரியத்தின் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்க ஒரு பொன்னான வாய்ப்பு என்றார்.
அடுத்த தலைமுறைக்கு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் செல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
குஜராத் டு ஐசிசி
குஜராத் கிரிக்கெட் சங்கம் முதல் பிசிசிஐ மற்றும் ஐசிசி வரையிலான நிர்வாகப் பயணம்
2009-ஆம் ஆண்டு அகமதாபாத் கிரிக்கெட் வாரியத்தில் தனது நிர்வாக பயணத்தைத் தொடங்கிய ஜெய் ஷா, 2019 அக்டோபரில் பிசிசிஐயின் இளம் செயலாளராக பொறுப்பேற்றார்.
அவரது பதவிக்காலத்தில் ₹48,390.5 கோடி மதிப்பிலான ஐபிஎல் ஊடக உரிமை ஒப்பந்தம், மகளிர் ஐபிஎல் அறிமுகம் மற்றும் ஆண்-பெண் வீரர்களுக்கு சம ஊதியம் ஆகிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஐசிசி தலைவரான ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.