முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்: சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் விஜய், இன்று பகல் 1 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இன்று மாலை 6 மணிக்கு டெல்லி ஐ.டி.சி மௌர்யா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார். கடந்த மே மாதம் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த பிறகு, முதல்வர் விஜய் டெல்லி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
சோனியா காந்தி
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு
ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள, சோனியா காந்தி எழுதிய 544 பக்கங்கள் கொண்ட 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதை நூல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களுடன் தமிழக முதல்வர் விஜய்யும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றபோது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை
மேகதாது அணை சர்ச்சையும் பிரதமருடனான சந்திப்புத் திட்டமும்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், முதல்வரின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்,"காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்; இதற்குத் தமிழகத்தின் அனுமதி தேவையில்லை" எனப் பேசியது தமிழக விவசாயிகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், டெல்லி செல்லும் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கிடைத்தால், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என நேரில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.