Loading...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்: நவம்பர் 24-ல் மகா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்: நவம்பர் 24-ல் மகா தீபம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
10:50 am

செய்தி முன்னோட்டம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமுமான திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (நவம்பர் 15) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், காலை 6.05 மணி முதல் 7.35 மணிக்குள் 3-ஆம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரே உள்ள 63 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மகா தீபம்

நவம்பர் 24-ஆம் தேதி 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபம்

பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாகச் சிவபெருமான் எழுந்தருளியதைப் போற்றும் வகையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

நெய் கொள்முதல்

மகா தீபத்திற்காக ₹39 லட்சம் மதிப்பில் 4,500 கிலோ ஆவின் நெய் கொள்முதல்

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து பதினொரு நாட்கள் அணையாமல் பிரகாசிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 4,500 கிலோ முதல் தர தூய நெய் மற்றும் 2,000 மீட்டர் காடா துணி திரி பயன்படுத்தப்பட உள்ளது.

இதனையொட்டி ஆவின் நிறுவனத்திடமிருந்து 15 கிலோ எடையுள்ள ஒரு டின் ₹13,000 என்ற விலையில், 300 டின்களில் மொத்தம் 4,500 கிலோ அக்மார்க் நெய் ₹39 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு கோயில் மடப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காணிக்கை வசதி

40 லட்சம் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் நெய் காணிக்கை வசதி

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக மகா தீபத்திற்கு நெய் காணிக்கைத் தொகையை ரொக்கமாக செலுத்தவும், நேரடியாக நெய்யாக செலுத்தவும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT