'டிச.10-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுக'; தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சென்னை நகரில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன், நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் சாலையில் நடக்க நேரிடுவதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும், தமிழகம் முழுவதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.
நீதிபதிகள் அதிருப்தி
பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக நீதிபதிகள் அதிருப்தி
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினர்.
ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றிப் போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி செய்வதில் அதிகாரிகள் தெளிவற்ற அணுகுமுறையையே கையாண்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்தனர்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
உத்தரவு
தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதனையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
எல்லை குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைபாதைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளின்படி அகற்றி, பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாக நடப்பதற்கான சூழலை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிக்கை
உடனடியாக பணிகளைத் தொடங்கி டிசம்பர் 10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தமிழகம் முழுவதும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உத்தரவை செயல்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் தமிழகம் முழுவதும் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.