அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் விற்பனை: 180 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது போதி ட்ரீ சிஸ்டம்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்திய உணவு சேவைத் துறையின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்களில் ஒன்றாக, சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல உணவக மற்றும் இனிப்பக நிறுவனமான அடையார் ஆனந்த பவன் (A2B), தனது பெரும்பான்மை பங்குகளை போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு 180 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல்) விற்பனை செய்துள்ளது. சர்வதேச ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்கின் இளைய மகனான ஜேம்ஸ் முர்டோக் மற்றும் ஸ்டார் இந்தியா & டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி உதய் சங்கர் ஆகியோரால் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதலீட்டு நிறுவனமே போதி ட்ரீ சிஸ்டம்ஸ் ஆகும். ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜியோஸ்டார் ஆகியவற்றை தொடர்ந்து, போதி ட்ரீ நிறுவனத்தின் மூன்றாவது பெரிய முதலீடு இதுவாகும்.
புதிய இயக்குநர் குழு
நிர்வாகத்தில் மாற்றம்: உதய் சங்கர் தலைமையில் புதிய இயக்குநர் குழு
இந்த மூலோபாய கூட்டணியின் மூலம் A2B நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார். *
1970-களின் பிற்பகுதியில் சகோதரர்களான கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் கே.டி. வெங்கடேசன் ஆகியோரால் சிறிய இனிப்பு கடையாக தொடங்கப்பட்ட A2B, இன்று 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்தியாவில் 160 கிளைகளையும், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ளது.
"எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில், A2B நிறுவனத்தைப் பொதுப் பங்குச் சந்தைக்கு ஏற்ற நிறுவனமாக மாற்றுவதே இந்தக் கூட்டணியின் நோக்கம்" என நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்கள்
அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்கள் என்ன?
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் உடனான இந்தக் கூட்டணியின் கீழ் A2B நிறுவனத்தில் கீழ்க்கண்ட முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சமையலறைகள் மற்றும் உணவு உற்பத்தி மையங்களை உலகத் தரத்திற்கு நவீனமயமாக்குதல்.
நிறுவனத்தின் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகைகளை விரிவுபடுத்துதல்.
இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் A2B உணவகங்கள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட இனிப்பு, கார வகைகளின் விற்பனையை பல மடங்கு உயர்த்துதல்.
இந்த மெகா ஒப்பந்தத்தில் A2B நிறுவனத்திற்கு வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் மற்றும் கைத்தான் & கோ ஆகிய நிறுவனங்களும், போதி ட்ரீ நிறுவனத்திற்கு எர்ன்ஸ்ட் & யங், டிரைலீகல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஆலோசகர்களாக செயல்பட்டுள்ளன.