Loading...
'இழுத்தடிக்கும் வேலையை இனி அனுமதிக்க முடியாது, ஜாமீனை ரத்து செய்துவிடுவேன்': செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கடும் எச்சரிக்கை
செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது

'இழுத்தடிக்கும் வேலையை இனி அனுமதிக்க முடியாது, ஜாமீனை ரத்து செய்துவிடுவேன்': செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கடும் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கை, திட்டமிட்டு இழுத்தடிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இனி அனுமதிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், விருப்பம்போல மனுக்களை தாக்கல் செய்து வழக்கை தாமதப்படுத்தினால் ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். கடந்த 2011- 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறையில் பணி நியமனங்களை பணம் பெற்றுக்கொண்டு நிரப்பியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2018-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்ட 2,200-க்கும் மேற்பட்டோர் மீது மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை

நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதி,"ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்யக் கூடாது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஒவ்வொருவரும் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது".

"குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும்; எப்போது மனு தாக்கல் செய்யப்படும் என்பதை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்".

"தேவையின்றி வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. விருப்பம்போல மனு தாக்கல் செய்வதாக இருந்தால், ஜாமீனை ரத்து செய்துவிடுவேன்" ன நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

பதில்

செந்தில் பாலாஜி தரப்பு பதில்

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரிடம், "வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்களா?" என நீதிபதி நேரடியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி விரைவில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT