Loading...
150 வயது வரை வாழ ரஷ்ய அதிபர் புடின் திட்டம்: 7,000 குரங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

150 வயது வரை வாழ ரஷ்ய அதிபர் புடின் திட்டம்: 7,000 குரங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (74) நீண்ட நாள் கனவான 150 வயது வரை உயிர்வாழ்வதை நனவாக்கும் வகையில், ரஷ்ய விஞ்ஞானிகள் நீண்ட ஆயுள் கொண்ட குரங்குகளின் ரத்த மாதிரிகளை கொண்டு மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். புடினின் மிக நெருங்கிய நண்பரான மிகைல் கோவல்சுக் தலைமையிலான குர்சடோவ் நிறுவனம் மற்றும் பெட்ரோவ்ஸ்கி ரஷ்ய அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து, வயதான குரங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பிரத்யேக ரத்த வங்கியை உருவாக்கியுள்ளன.

சோதனை

7,000 குரங்குகளை வைத்து நடத்தப்படும் 'வயதைக் குறைக்கும்' சோதனை

குர்சடோவ் மரபணு மன்றத்தில் பேசிய கோவல்சுக் மற்றும் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநர் கான்ஸ்டான்டின் கோடென்கோ ஆகியோர் இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

கோவல்சுக்கின் நிறுவனத்தில் 22 இனங்களை சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

இவற்றில் 18 முதல் 30 வயதுக்கு மேற்பட்ட முதிய குரங்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மூளை, ரத்த நாளங்கள் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து முழுமையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

"குரங்குகள்தான் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான உயிரினம். அவற்றின் முதுமைப் பருவ மாற்றங்களை ஆய்வு செய்வதன் மூலம், மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க முடியும்" என கோவல்சுக் தெரிவித்துள்ளார்.

ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் புடின் பேசிய ரகசியம்

ரஷ்ய அரசாங்கம் 'புதிய சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்' என்ற பெயரில் வயதானதை தடுக்கும் தேசிய திட்டத்திற்காக பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

முன்னதாக 2025-ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்றிருந்தபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் புடின் தனிப்பட்ட முறையில் உரையாடியது தற்செயலாக ஒலிவாங்கியில் பதிவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் 150 வயது வரை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

அப்போது பேசிய புடின்,"உயிரித் தொழில்நுட்பத்தின் (Biotechnology) மூலம் மனித உறுப்புகளைத் தொடர்ந்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்; இதன் மூலம் நாம் சாகாவரத்தைக் கூட அடையலாம். நீண்ட காலம் வாழ, நீங்கள் மேலும் இளமையாக மாறுவீர்கள்" எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

புடின் மகள் பேட்டி

"மரணத்தை வெல்லும் மருந்து"

இதற்கிடையில், நாளமில்லா சுரப்பியல் நிபுணரான புடினின் மூத்த மகள் மரியா வோரோன்ட்சோவா சமீபத்தில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் இதுகுறித்துப் பேசியிருந்தார்.

முதுமையை எதிர்த்துப் போராடவும், 'மரணத்தை வெல்லவும்' கூடிய புதிய மருந்துகளை உருவாக்கும் திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், "மரணத்தை பற்றிய பயமே நீண்ட ஆயுளை அடைவதற்கான ஆராய்ச்சிகளுக்கு முக்கிய உந்துசக்தியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மரபணு சிகிச்சை மற்றும் 3D பயோபிரிண்டிங் மூலம் செயற்கை உறுப்புகளை உருவாக்குவதிலும் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT