வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 18 வரை மழை வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15-ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 3 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
இன்று, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வட கடலோரத் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 13 & 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.