Loading...
ஐபிஎல் 2027: உர்வில் படேலை வேறு அணிக்கு 'டிரேட்' செய்ய சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அபினவ் முகுந்த் அறிவுரை
உர்வில் படேலை வேறு அணிக்கு டிரேட் செய்ய சிஎஸ்கே-வுக்கு அபினவ் முகுந்த் யோசனை.

ஐபிஎல் 2027: உர்வில் படேலை வேறு அணிக்கு 'டிரேட்' செய்ய சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அபினவ் முகுந்த் அறிவுரை

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் வரலாற்றில் வெறும் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி சாதனை படைத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் படேலை, ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் வேறு அணிக்கு டிரேட் முறையில் மாற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் யோசனை தெரிவித்துள்ளார். அணியின் டாப் ஆர்டரில் அதிரடி பேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உர்வில் படேலுக்கு ஆடும் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபினவ் முகுந்தின் வாதம்

டாப் ஆர்டர் நெருக்கடி

ஜியோஸ்டார் தொலைக்காட்சியின் 'கேம் பிளான்' நிகழ்ச்சியில் பேசிய அபினவ் முகுந்த், "உர்வில் படேலை வேறு அணிக்கு டிரேட் செய்வதற்கான சிறந்த வாய்ப்பு சிஎஸ்கே-வுக்கு உள்ளது".

"அணியில் ஏற்கனவே ஆயுஷ் மத்ரே, கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சர்பராஸ் கான் போன்ற பல இளம் பேட்டர்கள் உள்ளனர்".

"இவர்கள் அனைவரும் உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், உர்வில் படேலுக்கு அணியில் இடம்கிடைப்பது மிகவும் சிரமம்".

எனவே, டாப் ஆர்டர் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் தேவைப்படும் மற்றொரு அணிக்கு அவரை டிரேட் செய்வது அவருக்கும் தொடர் வாய்ப்புகளைப் பெற்றுத்தரும்" என்று தெரிவித்தார்.

மாற்றுத் திட்டம்

ஆயுஷ் மத்ரேவுக்கு முக்கியத்துவம்

இளம் வீரர் ஆயுஷ் மத்ரே குறித்துப் பேசிய முகுந்த், "ஆயுஷ் மத்ரேவை எந்தக் காரணத்தைக் கொண்டும் அணி மாற்றக் கூடாது. அவர்தான் சிஎஸ்கேவின் அடுத்த மிகப்பெரிய எதிர்காலம்."

"தொடக்க வீரராகவும் 3-வது வரிசையிலும் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தைத் தரும் ஆற்றல் கொண்டவர்".

"சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும்போது, உர்வில் படேலுக்குப் பதிலாக சர்பராஸ் கானை மாற்று வீரராக வைத்துக்கொள்ளலாம்."

"அணியில் முதல் நான்கு வரிசைகளில் களமிறங்க பல வீரர்கள் போட்டி போடுவதால், உர்வில் படேலை விடுவிப்பது அணிக்குச் சமநிலையைக் கொடுக்கும்" என்றார்.

ADVERTISEMENT

இரட்டை சதம்

ரஞ்சிக் கோப்பையில் மிரட்டிய உர்வில்

கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்து, சுரேஷ் ரெய்னாவின் சிஎஸ்கே சாதனையை முறியடித்த உர்வில் படேல், அண்மையில் ரஞ்சிக் கோப்பைப் போட்டியிலும் தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குஜராத் அணிக்காக கேரளாவிற்கு எதிராக விளையாடிய அவர், வெறும் 214 பந்துகளில் இரட்டை சதம் கடந்து, ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது ஐபிஎல் கோப்பையைக் குறிவைத்து வரும் நிலையில், அணியின் கலவை குறித்த இந்த ஆலோசனை ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT