Loading...
உங்கள் BMI அதிகமாக இருந்தாலும் நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்கலாம்: உடல் பருமனை கணக்கிடும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி
BMI) முறைக்கு மாற்றாக புதிய பரிசோதனை முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உங்கள் BMI அதிகமாக இருந்தாலும் நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்கலாம்: உடல் பருமனை கணக்கிடும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

உடல் பருமனை கண்டறிய பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பிஎம்ஐ (BMI) முறைக்கு மாற்றாக, இடுப்பு சுற்றளவு மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உள்ளடக்கிய புதிய பரிசோதனை முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தவறான உடல் பருமன் நோயறிதலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த புதிய முறை உதவும் என புகழ்பெற்ற 'நேச்சர்' ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உடல் பருமன் கொண்டவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம், எடை குறைப்பு மருந்துகள் (GLP-1) அல்லது அறுவை சிகிச்சை ஆகியவற்றில் எது தேவை என்பதைத் துல்லியமாக தீர்மானிக்கவும், மருத்துவ வளங்களை சரியாகப் பயன்படுத்தவும் இந்த புதிய முறை அவசியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" எனப் பேராசிரியர் பிரான்சிஸ்கோ ரூபினோ வலியுறுத்தியுள்ளார்.

பழைய BMI முறை

பழைய BMI முறையின் குறைபாடுகள் என்ன?

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் பிரான்சிஸ்கோ ரூபினோ தலைமையிலான குழுவினர், பிரிட்டன், அமெரிக்கா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் 15 ஆண்டுகால மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

வெறும் உயரத்தையும் எடையையும் மட்டுமே கணக்கிடும் BMI முறையால், அதிக உடல் கொழுப்பு உள்ள 5% முதல் 9% பெரியவர்கள் கண்டறியப்படாமல் விடுபடுகின்றனர்.

அதே சமயம், முற்றிலும் ஆரோக்கியமாக உள்ள 3% பேர் தவறாக 'உடல் பருமன்' கொண்டவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.

உலகளவில் சுமார் 160 கோடி பேர் அதிக எடையுடனும் (BMI 25 - 29.9), கிட்டத்தட்ட 100 கோடி பேர் உடல் பருமனுடனும் (BMI 30+) உள்ளதாக பழைய முறை வகைப்படுத்தியுள்ளது.

புதிய முறை

உடல் பருமனை கண்டறியும் புதிய இரண்டு கட்ட முறை

லான்செட் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அணுகுமுறை, உடல் பருமனை மிகவும் துல்லியமாக வகைப்படுத்துகிறது.

BMI அளவு 40-க்கு மேல் இருந்தால் மட்டுமே நேரடியாக உடல் பருமன் எனக் கருதப்படும். அதற்கு குறைவாக (BMI 25-30+) இருப்பவர்களுக்கு, இடுப்புச் சுற்றளவு(ஆண்களுக்கு 102 செ.மீ-க்கு மேல், பெண்களுக்கு 88 செ.மீ-க்கு மேல்) மற்றும் உயரத்திற்கு ஏற்ற இடுப்பு விகிதம்(0.57-க்கு மேல்) ஆகியவற்றை பரிசோதித்த பின்னரே அதிகப்படியான கொழுப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

இரண்டாவது கட்டத்தில், அதிகப்படியான கொழுப்பு உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கிவிட்டதா என பரிசோதிக்கப்படும். உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் அது 'கிளினிக்கல் ஒபிசிட்டி' எனவும், பாதிப்பு இல்லாமல் ஆபத்து நிலையில் மட்டும் இருந்தால் 'பிரீ-கிளினிக்கல் ஒபிசிட்டி' எனவும் பிரிக்கப்படும்.

ADVERTISEMENT

முடிவுகள்

ஒரே BMI அளவு கொண்ட மூவருக்கு வெவ்வேறு முடிவுகள்

இந்தப் புதிய முறையின் சிறப்பம்சத்தை விளக்கும் மருத்துவர்கள், 32 என்ற ஒரே BMI அளவு கொண்ட மூன்று நபர்களை உதாரணமாக காட்டுகின்றனர்.

முதல் நபர்: அதிக கொழுப்பு இல்லாமல் தசை அடர்த்தியுடன் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

இரண்டாவது நபர்: அதிக கொழுப்பு இருந்தாலும், உடல் உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கலாம். (இவர்களில் 80% முதல் 90% பேருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த நோயும் ஏற்படுவதில்லை).

மூன்றாவது நபர்: அதிக கொழுப்புடன் உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, உடனடி சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கலாம்.

ADVERTISEMENT