இந்திய ராணுவ விண்வெளித் துறையில் புதிய மைல்கல்: AI உளவுச் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ரூ.64.05 கோடி நிதியுதவி ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையின் தற்சார்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவை சேர்ந்த அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ரூ.64.05 கோடி நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தின் மூலம் வழங்கப்படும் இந்தத் தொகை, சுமார் ரூ.128.11 கோடி மதிப்பிலான உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மின்னணு உளவு செயற்கைக்கோள் கூட்டமைப்பை (ELINT Satellite Constellation) வடிவமைத்து விண்ணில் நிலைநிறுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
செயல்பாடு
50 கிலோ எடையுள்ள 'விண்வெளி உளவு நெட்வொர்க்' எப்படிச் செயல்படும்?
சாதாரண ஒளியியல் உளவு செயற்கைக்கோள்கள் புகைப்படங்களை மட்டுமே எடுக்கும்; அவை மேகமூட்டம் அல்லது இருட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், ELINT (Electronic Intelligence) செயற்கைக்கோள் கூட்டமைப்பு தரை, கடல் மற்றும் வான்வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை இடைமறித்து, அவற்றின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிந்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது.
பூமியின் தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ள தலா 50 கிலோ எடையுள்ள நுண்ணிய செயற்கைக்கோள்கள், மூன்று முக்கிய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துச் செயல்படும்- பரந்த அலைவரிசை ELINT கருவிகள், செயற்கைக்கோள்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பு, AI தரைவழிப் பகுப்பாய்வு மென்பொருள்.
உளவுத் தரவு
வெளிநாட்டு உளவுத் தரவுகளைச் சார்ந்திருப்பதற்கு முற்றுப்புள்ளி
நவீன போர் முறைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பில் எதிரிகளின் ரேடார் செயல்பாடுகள், கடற்படை நகர்வுகள் மற்றும் தகவல் தொடர்புகளை முன்கூட்டியே கண்காணிப்பது மிக அவசியம்.
இதுவரை இத்தகைய அதிநவீன விண்வெளி உளவுத் தகவல்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது; இதனால் நெருக்கடியான நேரங்களில் தகவல்கள் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
அரசு ஆய்வகங்களை மட்டுமே நம்பியிராமல், உள்நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் ராணுவ உளவுச் சொத்துக்களை உருவாக்கும் மத்திய அரசின் வியூக மாற்றத்திற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்தச் செயற்கைக்கோள் கூட்டமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, இந்திய துணைக்கண்டம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்குத் தடையற்ற, நிகழ்நேர உளவுத் தகவல்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.