Loading...
6 மாநிலங்களில் விரிவாக்கம்: சென்னை, பெங்களூருவுக்கு வருகிறது Green SM எலக்ட்ரிக் டாக்ஸி
சென்னை, பெங்களூருவுக்கு வருகிறது கிரீன் எஸ்.எம் எலக்ட்ரிக் டாக்ஸி

6 மாநிலங்களில் விரிவாக்கம்: சென்னை, பெங்களூருவுக்கு வருகிறது Green SM எலக்ட்ரிக் டாக்ஸி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
11:40 am

செய்தி முன்னோட்டம்

மின்சார வாகனப் போக்குவரத்து நிறுவனமான கிரீன் எஸ்.எம் (Green SM), இந்தியாவில் தனது செயல்பாடுகளை ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, உள்ளூர் ஓட்டுநர்களுக்கு பல்லாயிரக்கணக்கான புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து முறையான உரிமங்களைப் பெற்று, உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து கட்டமைப்பு வசதிகளை இந்நிறுவனம் வலுப்படுத்தி வருகிறது.

மின்சார டாக்ஸி சேவை

சென்னை மற்றும் பெங்களூரு சந்தைகளில் கால்பதிக்கும் மின்சார டாக்ஸி சேவை

தற்போது டெல்லி-என்சிஆர் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் கிரீன் எஸ்.எம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அடுத்தகட்டமாக தென்னிந்தியாவின் முக்கியத் தொழில்நுட்ப மற்றும் வணிக நகரங்களான சென்னை மற்றும் பெங்களூருவில் தனது சேவையைத் தொடங்க இந்நிறுவனம் தயாராகியுள்ளது.

கர்நாடக போக்குவரத்துத் துறையிடம் இருந்து செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளதால் பெங்களூருவில் விரைவில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை மற்றும் பெங்களூருவுக்கான அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நலத்திட்டங்கள்

5 மாதங்களில் 15 லட்சம் பயணங்களும் ஓட்டுநர்களுக்கான நலத்திட்டங்களும்

கடந்த 2026 ஜூன் மாதம் வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் (VinFast Limo Green) மின்சாரக் கார்களுடன் டெல்லி-என்சிஆர் பகுதியில் கிரீன் எஸ்.எம் தனது இந்திய பயணத்தைத் தொடங்கியது.

தொடங்கிய வெறும் ஐந்து மாதங்களிலேயே 15 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களை நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போதைய விரிவாக்கத்தின் மூலம் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தொழில்முறை பயிற்சி, சிறந்த வருமானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்வோம் என இந்திய சிஇஓ ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அரசு விதிகளின்படி கட்டணம்

அரசு விதிகளின்படி கட்டணம் மற்றும் கிலோமீட்டருக்கு ₹8 என்ற வதந்திக்கு மறுப்பு

கிரீன் எஸ்.எம் நிறுவனம் தான் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் போக்குவரத்து விதிகள் மற்றும் அரசு நிர்ணயித்த கட்டண நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் என அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பயணத்தை உறுதி செய்வதற்கு முன்பே செயலியில் பயணக் கட்டணம் வெளிப்படையாகக் காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஒரு கிலோமீட்டருக்கு ₹8 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

ADVERTISEMENT