மியாமி விமான நிலையத்தில் UPS சரக்கு விமானமும் பயணிகள் விமானமும் மோதி விபத்து: வெளியான பரபரப்பு வீடியோ
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (நவம்பர் 14) இரவு 9.15 மணியளவில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கொலம்பியாவின் பொகோட்டா நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த யுபிஎஸ் (UPS) நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும், பனாமா சிட்டியிலிருந்து வந்திறங்கிய கோபா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானமும் ஓடுபாதைக்கு செல்லும் டாக்ஸிவே சந்திப்பில் குறைந்த வேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகின. கூடுதல் விபரங்கள் இங்கே:-
வழிவிடத் தவறியதால் விபத்து
வழிவிடத் தவறியதால் இறக்கை உரசியதாக ATC ஆடியோ மற்றும் வீடியோவில் தகவல்
விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) உரையாடலில், தாங்கள் சற்று அதிக தூரம் முன்னேறிச் சென்றுவிட்டதாகவும், மற்றொரு விமானத்தின் இறக்கை தங்களது விமானத்தை உரசிவிட்டதாகவும் விமானி ஒருவர் கூறுவது பதிவாகியுள்ளது.
பனாமாவிலிருந்து வந்திறங்கிய கோபா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு யுபிஎஸ் விமானம் வழிவிட்டிருக்க வேண்டும் எனக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும் பயணிகள் எடுத்த வீடியோவில் யுபிஎஸ் சரக்கு விமானத்தின் முன்பகுதி சேதமடைந்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: A UPS Boeing 767 collided with a Copa Airlines Boeing 737 at Miami International Airport. pic.twitter.com/Dli2WlDnFJ
— Breaking911 (@Breaking911) November 15, 2026
இருவருக்கு காயம்
இருவருக்கு லேசான காயம் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளில் பாதிப்பில்லை என அறிவிப்பு
விபத்து நடந்த உடனேயே மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த மோதலில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இருவருக்கு மட்டும் லேசான காயங்களுக்காக சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு மற்ற விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு தழுவிய பாதிப்பு
நாடு தழுவிய விமான நிறுத்தத்திற்கு மறுநாள் நிகழ்ந்த விபத்தால் பரபரப்பு
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பிறப்பித்த நாடு தழுவிய விமான நிறுத்த உத்தரவால், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே பல விமானங்கள் தாமதமாகிப் பயணிகள் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.
விமான போக்குவரத்து மீண்டும் சீராகி வந்த சூழலில் சனிக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.