சீனாவின் ஆதிக்கத்திற்கு செக்: ஏஐ விநியோக சங்கிலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் முக்கியத் தொழில்நுட்ப விநியோக சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில் இந்தியா இணைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை செயலர் ஜேக்கப் ஹெல்பர்க் பைனான்சியல் டைம்ஸ் நாளிதழிடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நவம்பர் 15 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுடன் தென் கொரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
தொழில்நுட்பப் பாதுகாப்புக் கூட்டமைப்பு
பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப்படும் தொழில்நுட்பப் பாதுகாப்புக் கூட்டமைப்பு
கடந்த 2025 டிசம்பரில் தொடங்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) திட்டத்தின் முக்கியப் பகுதியாக இந்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனம் அமைந்துள்ளது.
அர்ஜென்டினா, சிலி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 24 நாடுகளாக விரிவடைந்துள்ள இக்கூட்டமைப்பில், வரும் வாரத்தில் ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையமும் கையெழுத்திட உள்ளன.
பொருளாதார பாதுகாப்பே தேசியப் பாதுகாப்பிற்கு அடிப்படை என இப்பிரகடனம் வலியுறுத்துகிறது.
அரிய வகை கனிமங்கள்
செமிகண்டக்டர் முதல் அரிய கனிமங்கள் வரை பகிரப்பட்ட பொறுப்பாகப் பாதுகாக்க ஒப்பந்தம்
இந்த பிரகடனத்தின் கீழ் செமிகண்டக்டர் வடிவமைப்பு, சிப் தயாரிப்பு இயந்திரங்கள், துறைமுகத் தளவாடங்கள், அரிய வகை கனிமங்கள், காந்தங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்பு ஆகியவற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்களின் கூட்டுப் பட்டியலை உறுப்பு நாடுகள் உருவாக்க உள்ளன.
சிப் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை வெவ்வேறு நாடுகளில் பரவியுள்ளதால், அவற்றின் பாதுகாப்பைப் பகிரப்பட்ட பொறுப்பாகக் கருதி ஒத்துழைப்பதே இதன் வரலாற்றுச் சிறப்பு என ஜேக்கப் ஹெல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பப் போட்டி
அமெரிக்கா-சீனா ஏஐ தொழில்நுட்பப் போட்டியும் விநியோக சங்கிலி பாதுகாப்பின் அவசியமும்
கடந்த 2022 அக்டோபரில் என்விடியா நிறுவனத்தின் நவீன A100 மற்றும் H100 ஏஐ சிப்புகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அமெரிக்கா கடும் தடை விதித்தது.
இருப்பினும் சீனா தனது உள்நாட்டு நிறுவனங்களான DeepSeek, Qwen, Moonshot AI மற்றும் ByteDance மூலம் சாட்ஜிபிடிக்கு நிகரான ஏஐ மாடல்களை உருவாக்கி வருகிறது.
மேலும் தடைகளை மீறி என்விடியா சிப்புகள் சீனாவிற்கு சென்றதாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, நம்பகமான விநியோக சங்கிலியை உருவாக்க அமெரிக்கா இந்தக் கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது.