ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்கும் திட்டமில்லை: Nvidia வாரியம் திட்டவட்ட மறுப்பு
செய்தி முன்னோட்டம்
தொழில்நுட்ப உலகின் முன்னணி தலைவர்களும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஆதரவு தெரிவித்தபோதிலும், நிறுவனத்தின் முன்னாள் CEO ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அதே பதவியில் நியமிப்பது குறித்து தங்களது இயக்குநர் குழு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என என்விடியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தாம் 33 ஆண்டுகளாக வழிநடத்திய என்விடியா நிறுவனத்திலிருந்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவரது நடத்தை குறித்த விசாரணையிலேயே வாரியம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
விசாரணை
விசாரணையில் தீவிரம் காட்டும் என்விடியா இயக்குநர் குழு
ஆலிஸ் ஹுவாங் என்ற தொழிலதிபருடனும், நிறுவன ஊழியர்களுடனும் தமக்குத் தொடர்பு இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது.
குறிப்பாக, ஆலிஸ் ஹுவாங்கிற்கு சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் பாதுகாப்பு அச்சம் எழுந்துள்ளது.
ஹுவாங்கின் நடவடிக்கைகளால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா அல்லது என்விடியாவின் ரகசிய தகவல்கள் கசிந்தனவா என்பதை விசாரிக்க சட்ட நிறுவனத்தை என்விடியா வாரியம் நியமித்துள்ளது.
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், அதற்குப் பதிலாகப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளதாகவும் CNBC செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதரவு
ஜென்சன் ஹுவாங்கிற்கு வலுக்கும் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆதரவு
என்விடியா வாரியம் பிடிவாதமாக இருந்தாலும், தொழில்நுட்ப துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஹுவாங்கை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க கோரி தொடங்கப்பட்ட இணையவழி மனுவில் இதுவரை 1,80,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், ஒய் காம்பினேட்டர் CEO கேரி டான் மற்றும் எபிக் கேம்ஸ் சிஇஓ டிம் ஸ்வீனி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஜென்சன் ஹுவாங் மீண்டும் பதவிக்கு வருவதை நான் ஆட்சேபிக்க மாட்டேன். அவர் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டார் என நினைக்கிறேன். அவர் மீண்டும் வரலாம்; அவரைத் திரும்பக் கொண்டுவர ஒரு பெரிய குழுவே விரும்புகிறது" எனத் தெரிவித்தார்.