Loading...
அமெரிக்காவில் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் முடக்கம்: மற்றுமொரு சைபர் தாக்குதலா?
அமெரிக்காவில் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் முடக்கம்

அமெரிக்காவில் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் முடக்கம்: மற்றுமொரு சைபர் தாக்குதலா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஆன்லைன் கணக்குகளை பயன்படுத்துவதில் திங்கட்கிழமை வாடிக்கையாளர்களுக்குக் கடும் சிக்கல் ஏற்பட்டது. பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ், ஜே.பி. மோர்கன், யு.எஸ். பேங்க், வெல்ஸ் பார்கோ மற்றும் பணப் பரிவர்த்தனைத் தளமான ஸெல்லே ஆகியவற்றின் சேவைகளில் இந்த திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணையதளச் சேவை முடக்கங்களை கண்காணிக்கும் டவுன்டெக்டர் தளத்தில், ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்கு அணுகலில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

சைபர் தாக்குதல்?

சேஸ் வங்கி அளித்துள்ள விளக்கம் என்ன?

இந்த சேவை முடக்கம் சைபர் தாக்குதலால் ஏற்பட்டதா என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த நிலையில், சேஸ் வங்கி அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது

சேஸ் வங்கியின் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு வெறும் தொழில்நுட்பக் கோளாறால் மட்டுமே ஏற்பட்டது என்றும், இதற்கும் சைபர் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில பரிவர்த்தனைகள் முடிவடைய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளையும் பணத்தையும் தொடர்ந்து அணுக முடியும். இந்தப் பிரச்சினையை விரைவில் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என சேஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப முடக்கங்கள்

அடுத்தடுத்து ஏற்படும் தொழில்நுட்ப முடக்கங்கள்

அமெரிக்காவில் முக்கிய டிஜிட்டல் சேவைகள் அடுத்தடுத்து முடங்கி வருவது தொழில்நுட்ப வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சேஸ் வங்கி அமைப்பில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக, பிற வங்கிகளுடனான பரிவர்த்தனைகளிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸெல்லே தளம் வழக்கம்போல் செயல்பட்டாலும், வங்கிகளின் தொழில்நுட்பச் சிக்கலால் சில வாடிக்கையாளர்களுக்குப் பணப் பரிவர்த்தனை தாமதமானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் மற்றும் ஏ.ஐ உதவியாளரான கோபைலட் ஆகிய சேவைகள் பல மணி நேரம் முடங்கியிருந்த நிலையில், சில நாட்களிலேயே அமெரிக்க வங்கிகளின் ஆன்லைன் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT