கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. தொடர்ந்து இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், ஒகேனக்கல் மற்றும் சிறுவாணி பகுதிகளில் அதி கனமழை அல்லது கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Twitter Post
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 115.6 மி.மீ. முதல் 201.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது, எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.