Loading...
மைக்ரோசாப்ட் முடக்கத்தால் இண்டிகோ அவசர எச்சரிக்கை; உலகம் முழுவதும் நிதிச் சந்தைகள் ஸ்தம்பிப்பு
மைக்ரோசாப்ட் முடக்கத்தால் இண்டிகோ அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

மைக்ரோசாப்ட் முடக்கத்தால் இண்டிகோ அவசர எச்சரிக்கை; உலகம் முழுவதும் நிதிச் சந்தைகள் ஸ்தம்பிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
04:28 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Outlook, Teams மற்றும் Copilot ஆகிய சேவைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முடக்கம், இந்திய விமான போக்குவரத்துத் துறை மற்றும் நிதி சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 74 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவைப் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

முக்கிய அப்டேட்

இண்டிகோ & ஏர் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்

மைக்ரோசாப்ட் முடக்கம் காரணமாக தங்களது வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இரு நிறுவனங்களும் விளக்கமளித்துள்ளன.

இண்டிகோ: தங்களது இ-மெயில் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் தங்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகவும் இண்டிகோ எச்சரித்துள்ளது. அவசர உதவி தேவைப்படும் பயணிகள் தங்களது இணையதளம் அல்லது செயலியில் உள்ள '6E Skai' சேவை வழிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் தங்களது விமானச் சேவைகளோ அல்லது வாடிக்கையாளர் தொடர்புகளோ பாதிக்கப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பயணிகளின் மின்னஞ்சல்கள் தொலைந்து போகாமல் இருக்க மாற்றுப் பாதைகள் வழியாக இ-மெயில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், வழக்கம்போல 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பாதிப்பு

இந்திய நிதிச் சந்தைகள் & உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு

மைக்ரோசாப்ட் முடக்கத்தால் இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் நிதி சேவைத் துறையிலும் பணிகள் முடங்கியுள்ளன.

காலை நேரச் சந்தை முடிவுகளுக்கு மிக முக்கியமான தினசரி ஆய்வு அறிக்கைகளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பங்குச் சந்தை ஊழியர்கள் தவித்தனர். முக்கிய வாடிக்கையாளர்களுடனான 'டீம்ஸ்' அழைப்புகளும் பாதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் கூட்டாட்சி காவல்துறை, ஜப்பான் அரசின் பகிரப்பட்ட ஐ.டி தளம், சிங்கப்பூர் அரசு அமைப்புகள் மற்றும் பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இ-மெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

OpenAI மற்றும் Anthropic ஆகிய நிறுவனங்களின் மைக்ரோசாப்ட் 365 இணைப்புகளிலும் கோளாறு நீடிக்கிறது.

ஒரே தொழில்நுட்ப நிறுவனத்தை முழுமையாக சார்ந்திருக்காமல், நிறுவனங்கள் மாற்றுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

மைக்ரோசாப்ட்

சேவையை சீரமைக்கத் திணறும் மைக்ரோசாப்ட்

வியாழக்கிழமை மாலை உச்சகட்டமாக டவுன்டிடெக்டர் தளத்தில் சுமார் 1,40,000 புகார்கள் பதிவாகியுள்ளன.

சில சர்வர்கள் எதிர்பாராத விதமாக செயலிழந்ததால் மற்ற சர்வர்களில் ஏற்பட்ட அதிகப்படியான சுமையே இதற்கு காரணம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்புகளை மறுதொடக்கம் செய்து கோளாறுகளைச் சரிசெய்யும் முயற்சிகள் முழுமையான பலனைத் தராத நிலையில், தற்போதைய நடவடிக்கையில் "சிறிய அளவிலான வெற்றி" மட்டுமே கிடைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் ஒப்புக்கொண்டுள்ளது.

சேவைகளை முழுமையாக நிலைநிறுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT