Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஷம்சி, 4 வீட்டுகளை வீழ்த்தினார். சுழலுக்கு சாதகமான பீச்சில் சற்று கடினமான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மற்றொருபுறம் ஐடன் மார்க்ராம் 91 ரன்கள் சேர்த்தார். 47வது ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருந்த நிலையில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி மகாராஜ் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
இங்கிலாந்துடனான போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி மும்பையில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது, காயமடைந்த ஹர்திக் பாண்டியா, இந்தியாவின் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. லக்னோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை என்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிக்கான விருப்ப பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி, குணமாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இவர் அடுத்தடுத்து போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளது சின்ன காயம் தான் என தெரிவித்துள்ளனர். இந்தியா தனது அடுத்த அடுத்த ஆட்டங்களில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா வேறு எந்த நாட்டையும் விட அதிக வீரர்களை அனுப்பி இருந்த நிலையில், பதக்க பட்டியலிலும் தொடர்ந்து இந்தியா ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. நேற்று மட்டும் 7 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் என 17 பதக்கங்களை வென்றிருந்தது. மேலும் இந்திய அணி மொத்தம் 99 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. போட்டிகளை நடத்தும் சீனா, 196 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 493 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
துபாயில் நடக்கும் ஐபிஎல் ஏலம்
அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில், டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுக்க அதிகபட்சமாக, ₹100 கோடி வரை செலவிடலாம். கடந்த வருடம் இது ₹95 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ், டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட வீரர்கள் இந்த வருட ஏலத்தில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- இந்தியா வெற்றி
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை, இந்தியா வெற்றியுடன் தொடக்கியது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சங்கீதா குமாரி (29', 45', 45') ஹேட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மேலும் நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில், நடப்பு சாம்பியன் ஜப்பான் (3-0) என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. சீனா(1-0) என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் வீழ்ந்தது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று, இந்தியா - மலேசியா, சீனா - தாய்லாந்து, ஜப்பான் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன.