கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை
இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 28,522 கொலைகள் நடைபெற்றுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 78 கொலைகளும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 கொலைகளும் நடைபெறுவதாக குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் "இந்தியாவில் குற்றங்கள்-2022" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,491 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. பீகார் (2,930), மகாராஷ்டிரா (2,295), மத்தியப் பிரதேசம் (1,978), ராஜஸ்தான் (1,834), மற்றும் மேற்கு வங்கம் (1,696) முறையே அதிக கொலை வழக்குகள் பதிவான முதல் 5 மாநிலங்களாக உள்ளது.
ஒன்பதே கொலை வழக்குகள் மற்றும் பதிவான சிக்கிம் மாநிலம்
சிக்கிம் (9), நாகாலாந்து (21), மிசோரம் (31), கோவா (44), மணிப்பூர் (47) முறையே, குறைவான கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களாக உள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில், டெல்லியில் அதிகபட்சமாக 509 வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 99 வழக்குகளும் பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் 95.4 சதவீதம் பேர் வயது வந்தவர்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்களில் 70% மேற்பட்டோர் ஆண்கள். 8,125 பெண்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் கொலை செய்யப்பட்டதாக, கடந்த ஆண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன?
இந்தியாவில் கொலைகள் நடைபெற மிக அதிக காரணமாக பிரச்சனைகள்/ சர்ச்சைகள் காரணம் என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. கடந்தாண்டு மட்டும், 9,962 கொலைகள் இந்த நோக்கத்திற்காக நடைபெற்றதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த நோக்கத்தின் கீழ், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,130 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 1,045 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சர்ச்சைகளுக்குப் பிறகு, 'தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை' பட்டியலில் கடந்த ஆண்டு இதுபோன்ற 3,761 வழக்குகள் பதிவாகியுள்ளன. பீகார் (804), மத்தியப் பிரதேசம் (364), கர்நாடகா (353) ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.