வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக இன்று, நவம்பர் 27 தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று, 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது: கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, ராமநாதபுரம். மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.