Loading...
'போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே தருணம்': உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

'போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே தருணம்': உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
07:46 am

செய்தி முன்னோட்டம்

அபுதாபியில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுடனான தனது ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். அதே வேளையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் அதிபர்

"போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தலைமை தாங்கலாம்"

பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"இப்போது போரைத் தொடர்வதற்கான நேரமல்ல; முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்பதைப் பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் பலமுறை நேரடியாகவே வலியுறுத்தியுள்ளார்".

"இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர பிற உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதைக் கண்டறிவது அவசியமாகும். உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னணிப் பங்கு வகிக்க முடியும்."

பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது, தூதரக வழிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே போருக்குத் தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ராஜதந்திர முயற்சி

ஜெய்சங்கர் - செர்ஜி லாவ்ரோவ் பேச்சுவார்த்தை

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேசியது குறித்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "உக்ரைன் மோதல் மற்றும் தற்போது நடைபெற்று வரும் அமைதிக்கான ராஜதந்திர முயற்சிகள் குறித்து எங்களது உரையாடல் அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிஷ்கேக்கில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த பிரதமர் மோடி, "முடிவில்லா போரிலிருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

புடினும் மோடியின் அமைதி யோசனைகளைப் பாராட்டியிருந்தார் சுட்டிக்காட்டத்தக்கது.

ADVERTISEMENT

முத்தரப்புப் பேச்சுவார்த்தை

அபுதாபியில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா சந்திப்பு

கடந்த 2022 பிப்ரவரிக்கு பிறகு முதன்முறையாக அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேரடியாகச் சந்தித்துப் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் தனது நிலப்பரப்புகளை விட்டுக் கொடுக்க வேண்டும் மற்றும் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என ரஷ்யா நிபந்தனை விதிக்கிறது.

நிலப்பரப்புகளை விட்டுக் கொடுக்க உக்ரைன் மறுத்துள்ளதுடன், நேட்டோ அமைப்பின் 5-வது விதியைப் போன்ற பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கோருகிறது.

இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கு மிக அருகில் வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் அமைதி திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் சமரச முயற்சிகள் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT