அரசுப் பேருந்துகளில் இனி முழு பாதுகாப்பு: VLTD கருவி மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்த ரூ.17.99 கோடி விடுவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், பேருந்துகளின் இயக்கத்தை லைவ்வாக கண்காணிக்கவும் ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முன்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில் நிதியை விடுவித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பிடக் கண்காணிப்பு
13,490 வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் இணைப்பு
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13,490 பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும், 13,776 பேருந்துகளில் அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்தப்பட உள்ளன.
AIS 140 தரத்திலான இக் கருவிகள் மாநில மையக் கண்காணிப்பு அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
இதனால் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்குவது துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
நவீன கட்டுப்பாட்டு மையம்
அவசர காலத்தில் உடனடி உதவி வழங்கும் நவீன கட்டுப்பாட்டு மையம்
பயணங்களின் போது ஆபத்து அல்லது அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் பயணிகள் இந்த அவசர உதவி பொத்தான்களை (Panic Button) அழுத்தலாம்.
இவ்வாறு அழுத்தப்படும் போது கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக எச்சரிக்கை செய்தி சென்றடையும்.
அதன் அடிப்படையில் பேருந்து இருக்கும் இடத்தை நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் அறிந்து, காவல்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைந்து சென்று உதவி வழங்குவர்.
இந்த செயல்பாடு அவசரகாலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிவேகத்தில் மேற்கொள்ள வழிவகுக்கும்.
பாதுகாப்பான பயணம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதியளிக்கும் அரசு
பேருந்தின் வேகம், தற்போதைய இருப்பிடம் மற்றும் அவசர எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் கண்காணிப்பது இயக்க மேற்பார்வையை பெருமளவில் மேம்படுத்தும்.
குறிப்பாக பணிக்கு செல்லும் மகளிர், பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகள் இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் போது அச்சமின்றி பயணிக்க இந்த திட்டம் பெரிதும் உதவும்.
பாதுகாப்புப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.