இந்திய அணி வராததால் ₹627 கோடி நஷ்டம்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி நெருக்கடி
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் 2027 ஆம் நிதியாண்டில் £50 மில்லியன் (சுமார் ₹627 கோடி) வரையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஆம் நிதியாண்டில் £12.6 மில்லியன் லாபத்தை பதிவு செய்திருந்த நிலையில், வரும் 2027-ல் மிகப்பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் 2027 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற போதிலும் இந்த மிகப்பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என அறிக்கைகள் கூறுகின்றன.
வருவாய் வீழ்ச்சி
இந்திய அணி செல்லாதது மற்றும் ஒளிபரப்பு வருவாய் வீழ்ச்சி
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊடக ஒளிபரப்பு வருவாயானது இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எதிரணியைப் பொறுத்தே பெருமளவில் தீர்மானிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு வந்து விளையாடும் தொடர்கள் மட்டுமே உலகளவில் மிகப்பெரிய வர்த்தக லாபத்தை ஈட்டித் தருகின்றன.
ஆனால், 2027-ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யாததால் ஒளிபரப்பு உரிமையின் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய ஒளிபரப்பு உரிமம் £20.2 மில்லியன் மட்டுமே ஈட்டித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி கட்டுப்பாடு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடு
இந்த இழப்பிற்கு மற்றொரு முக்கியக் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முடிவு அமைந்துள்ளது.
2028 ஆம் ஆண்டு முதல் தொடங்கவுள்ள அடுத்த சுழற்சி ஒளிபரப்பு ஒப்பந்தங்களின் மதிப்பு குறையக்கூடும் என்பதால், 2027-ல் தனது 12 முதன்மை உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டிய வருவாய்ப் பகிர்வின் ஒரு பகுதியை நிறுத்தி வைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.
பொதுவாக உலகக்கோப்பை நடைபெறும் ஆண்டுகளில் ஐசிசி அதிக நிதி வழங்கும் என்றபோதிலும், புதிய கட்டுப்பாட்டின் காரணமாக இங்கிலாந்து வாரியத்திற்கு வர வேண்டிய வழக்கமான நிதி வெகுவாகக் குறையும்.
கவுண்டி அணிகள்
உள்ளூர் கவுண்டி அணிகளில் எதிரொலிக்கவுள்ள நிதி நெருக்கடி
இங்கிலாந்து வாரியத்திற்கு ஏற்படவுள்ள நிதி இழப்பு அந்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இங்கிலாந்தின் 18 உள்ளூர் கவுண்டி அணிகளில் ஏற்கனவே 10 அணிகள் நிதி இழப்பில் இயங்கி வருகின்றன.
கவுண்டி அணிகள் தங்களது வருடாந்திர இயக்க செலவுகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிதியையே முழுமையாக சார்ந்திருப்பதால், வாரியத்தின் நிதி நெருக்கடி உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பையும் கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும் நிதி இழப்பை £35 மில்லியனாக குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.