Loading...
இஸ்ரேல் அரசியலில் திருப்புமுனை: புதிய அரசை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்க்கு அதிபர் அழைப்பு
இஸ்ரேல் புதிய அரசை அமைக்க காடி ஐசென்காட்க்கு அதிபர் அழைப்பு

இஸ்ரேல் அரசியலில் திருப்புமுனை: புதிய அரசை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்க்கு அதிபர் அழைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2026
04:53 am

செய்தி முன்னோட்டம்

நீண்டநாட்களாக நீடித்து வரும் இஸ்ரேலின் அரசியல் முடக்கத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, நாட்டின் புதிய அரசை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான காடி ஐசென்காட் என்பவருக்கு அதிபர் ஐசக் ஹெர்ஸாக் அழைப்பு விடுத்துள்ளார். நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு இது மாபெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அதிபர் மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வில், புதிய அரசை அமைப்பதற்கான அரசாணையை ஐசென்காட்டிடம் அதிபர் முறைப்படி வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்க ஐசென்காட்க்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

காடி ஐசென்காட்

காடி ஐசென்காட்க்கு முதன்மை வாய்ப்பு கிடைத்தது எப்படி?

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இருப்பினும், நெதன்யாகுவின் தலைமையிலான மதவாத-தேசியவாதக் கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை என்ற சூழலில், அவரால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.

அதேவேளையில், 21 இடங்களை வென்ற ஐசென்காட்டின் 'யாஷர்' கட்சி தலைமையிலான 4 கட்சிகளின் கூட்டணி 48 இடங்களைப் பெற்றது.

மேலும், 19 இடங்களை வென்ற இஸ்ரேலின் அரபு சிறுபான்மையின பிரதிநிதித்துவக் கட்சிகள், அதிபருடனான ஆலோசனையின் போது ஐசென்காட்டைப் பிரதமராக முன்மொழிந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 67 பேரின் ஆதரவுப் பரிந்துரையை ஐசென்காட் பெற்றார். நெதன்யாகுவிற்கு 46 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது.

விவரங்கள்

66 வயதான காடி ஐசென்காட் யார்?

இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதியான 66 வயது காடி ஐசென்காட், கடந்த 2022-ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் நுழைந்தார்.

காசா போரின் போது நாட்டை பாதுகாப்பதில் நெதன்யாகு அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த ஐசென்காட்டின் குடும்பம், போரில் பெரும் விலையைக் கொடுத்துள்ளது.

காசா போர்க்களத்தில் இவரது ஒரு மகனும் இரண்டு மருமகன்களும் உயிரிழந்தனர்.

"நெதன்யாகு இடம்பெறும் எந்தவொரு அமைச்சரவையிலும் நான் அங்கம் வகிக்க மாட்டேன்" என்பதில் ஐசென்காட் தீவிரமாக உள்ளார்.

ADVERTISEMENT