அமெரிக்காவில் சீயாட்டில் தீபாவளி விழாவில் இனவெறி சம்பவம்; விழாவில் புகுந்து கூச்சல் போட்ட வலதுசாரி கும்பல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சீயாட்டில் நகரின் சீயாட்டில் சென்டர் ஆர்மரி வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விழா அரங்கில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஜேக் லாங் மற்றும் தாமஸ் ஆலன் தலைமையிலான தீவிர வலதுசாரி அமைப்பினர் அமெரிக்கக் கொடிகளுடனும், வெறுப்புணர்வு அடங்கிய பேனர்களுடனும் திடீரென உள்ளே புகுந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மத வெறுப்பு முழக்கங்கள்
இனவெறி மற்றும் மத வெறுப்பு முழக்கங்கள் ஏந்திய பேனர்கள்
அந்த அமைப்பினர் ஏந்தி வந்த பேனர்களில் தெற்காசியாவையும், குறிப்பாக இந்திய மற்றும் இந்து சமூகத்தினரை குறிவைத்தும் சொல்லப்படும் "Deport All Dot Heads" (நாட்டிலிருந்து வெளியேற்றுங்கள்) என்ற இனவெறி வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
அதுமட்டுமின்றி, "கிறிஸ்தவர்களுக்குப் பதிலாக இந்துக்கள் வருவதைத் தடுத்து நிறுத்துங்கள்" (Stop Hindu Replacement of Christians) என்ற மதரீதியான வெறுப்பு முழக்கங்களும் அதில் எழுதப்பட்டிருந்தன.
இந்த கலாச்சார விழாவிற்கு இடையூறு ஏற்படுத்திய நபர்களை பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் உடனடியாக வெளியேற்றினர்.
ஜேக் லாங்கின் பின்னணி
சம்பவத்தில் ஈடுபட்ட ஜேக் லாங்கின் பின்னணி மற்றும் டிரம்ப் மன்னிப்பு
சம்பவத்தை முன்னின்று நடத்திய ஜேக் லாங், 'வைட் ரிப்ளேஸ்மென்ட்' (White Replacement) என்ற அமைப்பை நடத்தி வருபவர் ஆவார்.
கடந்த 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இவருக்கு, 2025-ஆம் ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
ஃப்ளோரிடா மாநிலத்தில் போட்டியிட முயன்ற இவர், தீவிர குடியரசுக் கட்சி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
கண்டனம்
அமெரிக்க இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கடும் கண்டனம்
இந்த இனவெறி சம்பவத்தை இந்திய வம்சாவளி அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினரான பிரமிளா ஜெயபால் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார்.
சீயாட்டில் நகரில் இத்தகைய அருவருப்பான இனவெறி செயல்களுக்கு எவ்வித இடமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகர் அஜய் ஜெயின் பூடோரியா மற்றும் பல தெற்காசிய அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
அமைதியான முறையில் பண்டிகையைக் கொண்டாடும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.