Loading...
AI நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' பாதுகாப்பு ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
முன்னணி தொழில்நுட்ப மற்றும் AI நிறுவனங்களின் தலைவர்களுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

AI நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' பாதுகாப்பு ஒப்பந்தம் என்ன கூறுகிறது?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
09:45 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'Joint Commitment on Frontier Responsibilities-ல்' அவர்களை கையெழுத்திட வைத்துள்ளார். இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல என்றாலும் "நேர்மை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுப்பாடு" (Morally Binding) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

4 அடுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைகள்

நிறுவனங்கள் பின்வரும் 4 முக்கியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

1.இணைய பாதுகாப்பு, உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) மற்றும் வேதியியல் அச்சுறுத்தல்கள் சாார்ந்த பகுதிகளில் ஏஐ மாடல்களின் திறனைக் கண்காணிக்கவும், அவை தவறுதலாகப் பிற தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவும் வலுவான அமைப்பை உருவாக்குதல்.

2.அனைத்துக் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பு அமைப்புகளும் சரியாக இயங்குகின்றனவா என்பதையும், ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அவற்றை உடனடியாகச் சரிசெய்வதையும் உறுதி செய்யத் தனிக்குழு அமைத்தல்.

3.நிறுவனத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் முறைப்படி இயங்குவதை மதிப்பீடு செய்யச் சுதந்திரமான வெளிப்புறத் தணிக்கையாளர்கள் அல்லது மதிப்பீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுதல்.

4.தணிக்கை அறிக்கைகளைப் பெறவும், கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாகச் நிவர்த்தி செய்யவும் இயக்குநர் குழுவின் கீழ் ஒரு சுதந்திரமான கமிட்டியை நியமித்தல்.

பங்கு

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முன்னணி தலைவர்கள்

ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட இந்த ஒப்பந்தத்தில், ஆந்த்ரோபிக் சி.இ.ஓ டேரியோ அமோடேய், மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், ஓபன்ஏஐ தலைவர் கிரெக் புராக்குமேன், எக்ஸ்ஏஐ தலைவர் எலான் மஸ்க், என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் மற்றும் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஏஐ மாடல்களின் அதிவேக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வப் பயன்பாட்டில் 'Artificial Intelligence(AI)' என்ற சொல்லுக்கு பதிலாக 'Super Intelligence(SI)' எனப் பயன்படுத்த உத்தரவிடும் ஆணையிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

70 ஆண்டுகள் பழமையான 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல் தற்போதைய நவீன தொழில்நுட்ப அமைப்புகளின் அசாத்திய ஆற்றலைப் பிரதிபலிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT