தவெக அரசை கவிழ்க்க ரகசிய பேரம்? டிசம்பர் 14-இல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் வியூகம்?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பதவியேற்று 6 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ஆட்சியை எதிர்கொள்ளும் வகையில் பின்னணியில் தீவிர அரசியல் சதுரங்க வேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஒன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையில் நடைபெற்றதாக கூறப்படும் ரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றில், தவெக அரசுக்கு எதிராக ஆளுநர் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட செய்து ஆட்சியை கவிழ்க்க உதவினால், டெல்லி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாக்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக பிரதான திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க பிரதிநிதிகளுக்கு இடையே பேர ஒப்பந்தம் பேசப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
டிசம்பர் 14-இல் நம்பிக்கையில்லா தீர்மானம்?
சட்டமன்ற விதிகளின்படி புதிதாக பதவியேற்ற அரசுக்கு எதிராக முதல் 6 மாதங்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.
தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதால், அடுத்தகட்டமாக சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடத்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் 'குரு பெயர்ச்சி' முடிந்த பிறகு, டிசம்பர் 13-க்குப் பின் தவெக அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர திராவிட கட்சிகள் திட்டமிட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரும் டிசம்பர் 14-ஆம் தேதியன்றே சட்டப்பேரவையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
விஜய்
முதல்வர் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு
ஒருபுறம் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் குடிநீர் கேட்ட வாக்காளரை தாக்கியதாக துறையூர் எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை, மறுபுறம் திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க-வின் பின்னணியில் உருவாகும் டிசம்பர் 14 நம்பிக்கையில்லாத் தீர்மான மிரட்டல் என தவெக அரசு கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தச் சவால்களை முறியடித்து ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவுகளை ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்றுநோக்கி வருகிறது.