முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்திய அரசியல் களம் தற்பொழுது சென்னை டூ டெல்லி எனப் பரபரப்பாக மாறியுள்ளது.
பின்னணி என்ன?
முதல்முறையாக எக்ஸ்ல்லி பயணம்
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண் இல்லாததால், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10-ம் தேதி திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்பின் போது பிரதமர் நரேந்திர மோடி தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு விஜய் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நன்றி கூறியிருந்தார். இந்தச் சூழலில், புதிய அரசு அமைந்து 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில், நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த டெல்லிப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகக் கோரிக்கைகள் என்னென்ன?
பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு
நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், இந்தியாவின் மிக முக்கியப் பொறுப்புகளில் உள்ள தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை விஜய் நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி, மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி (GST) நிலுவைத் தொகை விடுவிப்பு ஆகியவற்றுக்கான அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அவர் பிரதமரிடம் நேரில் வழங்கவுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரியும் அவர் வலியுறுத்த உள்ளார்.
அரசியல் முக்கியத்துவம்!
சோனியா, ராகுல் காந்தியுடன் சந்திப்பு
அரசுப் பூர்வமான சந்திப்புகளுக்கு இணையாக, அரசியல் ரீதியாகவும் இப்பயணம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. தற்போதைய தவெக கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்தும், அமைச்சரவையில் பங்கேற்றும் ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைத் டெல்லியில் உள்ள அவர்களின் இல்லங்களில் முதலமைச்சர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுகிறார்.
அரசு இல்லம்
தமிழ்நாடு இல்லத்தில் தீவிர ஏற்பாடுகள்
முதலமைச்சர் விஜய்யின் இந்த முதன்முறை வருகையையொட்டி, புது தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் தங்கும் அறை, டெல்லி அதிகாரிகளுடன் அவர் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்ட அரங்கம் மற்றும் செய்தியாளர் சந்திப்புப் பகுதி ஆகியவற்றைத் தயார் செய்யும் பணிகள் தற்பொழுது இறுதிவட்டத்தை எட்டித் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.